பாரம்பரியமான காமிக்ஸ் ஸ்டிரிப் ஹீரோக்களின் நடுவில் மிக உயரிய, மரியாதையான இடத்தைப் பெற்றது டெக்ஸ்வில்லரின் பாத்திரம். இவர் இடம் பெறும் கதைகள் குழந்தைகளுக்கானவை அல்ல. முதிர்ச்சியடைந்த வாசகர்களை திருப்திப்படுத்தும் மகிழ்விக்கும் நோக்கத்திலேயே இவரது கதைகள் உருவாக்கப்படுகின்றன. டெக்ஸ் காமிக்ஸில் பயன்படுத்தப்படும் மொழிநடை வன்முறை மிகுந்ததாகவும் கரடுமுரடாகவும் இருப்பதைப் பார்த்தாலே இதை உணர முடியும். 1948ஆம் வருடம் இத்தாலியைச் சேர்ந்த டி போனெல்லி காமிக்ஸிக்கான ஒரு பதிப்பகத்தை ஆரம்பிக்க விரும்பினார்.  இதற்காக புதிய காமிக்ஸ் ஹீரோவை உருவாக்கவும் விரும்பினார்.  மிலன் நகரத்தைச் சேர்ந்த அரேலியோ காலெப்பினிடம் அந்தப் பாத்திரத்தை உருவாக்கும் பொறுப்பை ஒப்படைத்தார் போனெல்லி. இந்தப் பாத்திரத்திற்கான கதையை எழுதும் பொறுப்பு போனெல்லியின் முன்னாள் கணவரான ஜி.எல். போனெல்லியிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் இருவரும் சேர்ந்து ஒச்சியோ க்யூபோ (கறுப்புக் கண்ணன்), டெக்ஸ் என இரண்டு பாத்திரங்களை உருவாக்கினார்கள்.
 
இந்தப் பாத்திரத்திற்கு டெக்ஸ் வில்லர் என பெயர் சூட்டப்பட்டதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. ஜி.எல். போனெல்லி மிலன் நகரில் சுற்றிக் கொண்டிருந்தபோது டெக்ஸ்மோடா என்றொரு பெயர்ப் பலகை அவர் கண்ணில் பட்டது. அதிலிருந்த டெக்ஸ் என்ற வார்த்தை அவரை ரொம்பவுமே கவர்ந்துவிட்டது. டெக்ஸ் என்ற வார்த்தையுடன் கில்லர் என்ற வார்த்தையைச் சேர்த்து டெக்ஸ் கில்லர் என்று அழைக்க நினைத்தார்  போனெல்லி. ஆனால், காமிக்ஸின் ஆசிரியர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், கில்லரில் “K”வை எடுத்துவிட்டு, ”W” சேர்த்து வில்லர் என்று ஆக்கிவிட்டார் போனெல்லி. இரவுக் கழுகு என்பது டெக்ஸின் செவ்விந்தியப் பெயர். ஒரு கதையில் அவர் அணிந்துவந்த உடை, முகமூடி காரணமாக அந்தப் பெயரால் அழைக்கப்பட்டார் டெக்ஸ். இன்னும் பல கதைகளில் செவ்விந்தியத் தலைவர்கள் டெக்ஸை இரவுக்கழுகார் என்று அழைப்பதைக் காணமுடியும்.

டெக்ஸ் கதைகள் வெளிவரத் துவங்கிய காலகட்டத்தில் அமெரிக்க வரலாறு பற்றிய தகவல்கள் அதன் ஆசிரியர்களுக்கும் ஓவியர்களுக்கும் சரியாகக் கிடைக்கவில்லை என்பதால், ஆரம்ப கால கதைகள் பெரும்பாலும் கற்பனையின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. கதை நடக்கும் இடம், காலம் பற்றிய குழப்பங்கள் இருந்தன. அதற்குப் பின் டெக்ஸின் இனம், அவர் வசிக்கும் இடம், கதை நடக்கும் காலகட்டம் போன்றவை தெளிவாக வரையறுக்கப்பட்டுவிட்டன. டெக்ஸ்வில்லரின் சாகசங்கள் பொதுவாக 1880களில் நடப்பதாக வைத்துக்கொள்ளலாம். நவாஹோ இனத்தைச் சேர்ந்த டெக்ஸின் வீடு அரிஸோனா மாகாணத்தில் அமைந்திருக்கிறது. ஆனால், அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களான, மெக்ஸிகோ, கனடா, சான் பிரான்சிஸ்கோ, நியூ ஆர்லியன்ஸ், வாஷிங்டன், யுகாடன் போன்ற பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வார் டெக்ஸ். தூரப் பகுதிகளான போஸ்டன், பனாமா, மேற்கு பசிபிக் தீவுகள் ஆகியவற்றிலும் இவரது துப்பாக்கி முழங்கியிருக்கிறது. டெக்ஸின் கதைகள் அடிப்படையி்ல் மேலைநாட்டு கதைகள்தான். ஆனால், மாய, மந்திர, தந்திரங்களும் சில கதைகளில் இடம்பெறுகின்றன.

இந்திய மொழிகளிலேயே தமிழில் மட்டும்தான் வளமான காமிக்ஸ் மரபு இருக்கிறது. ஐரோப்பாவில் வெளியாகும் மிக அற்புதமான காமிக்ஸ்களை எல்லாம் தாய்மொழியிலேயே படிக்கக் கொடுத்து வைத்தவர்கள் தமிழர்கள்.  இந்தப் பெருமை எல்லாம் ஐரோப்பிய காமிக்ஸ்களைத் தொடர்ந்து தமிழில் வெளியிட்டுவரும் லயன், முத்து காமிக்ஸ் இதழ்களையும் அதன் ஆசிரியர் எஸ். விஜயனை மட்டுமே சாரும்.
ஐரோப்பாவிலும் தமிழிலும் மிகப் பரிச்சயமான பல பிரபல நாயகர்களின் வரலாற்றை விவரிப்பதுதான் இந்தப் வலைபதிவின் நோக்கம். பெரும்பாலும் இணையத்திலிருந்தே தகவல்கள் எடுக்கப்படுகின்றன. அவற்றைத் தொகுத்து, தமிழில் தருவது மட்டுமே எனது வேலை. குற்றம், குறைகள் இருப்பின் உடனடியாகச் சுட்டிக்காட்டுங்கள். கட்டுரைகளை மேம்படுத்த அவை உதவும். இந்தத் தொடரில் முதலில் வரவிருப்பது இத்தாலிய காமிக்ஸ் உலகின் காவிய நாயகனான டெக்ஸ் வில்லரின் சரித்திரம்.